இலங்கையில் எவ்வளவு வருமானம் இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டும்..! வெளியான அறிவிப்பு
வரிமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பொன்றை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆண்டின் மொத்த வருமானம் 1,200,000 ரூபாவுக்கு மேல் இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக உரிமையாளர்கள், வாடகை அல்லது வட்டி தொடர்பான முதலீடுகளின் வருமானம் அல்லது குறிப்பிட்ட ஆண்டு வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பு ஆகியவை இதில் அடங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் வருமான வரி செலுத்துவதற்கான கணக்கினை திறப்பது தனி நபரின் பொறுப்பு என்பதுடன், தங்களின் வருமான வரியினை உரிய நேரத்தில் செலுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வருமான வரி கணக்கினை www.ird.gov.lk என்ற இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக பிரவேசித்து திறக்க முடியும் எனவும், தமது திணைக்களத்தின் இரண்டாம் மாடியில் உள்ள பதிவு செய்தல் பிரிவுக்கு பிரவேசித்தோ அல்லது இணையத்தள சேவைகள் ஊடாகவோ, வருமான வரி கோப்பைத் திறக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களிலும், வருமான வரி கோப்பைத் திறப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.