கனடா

இந்தியா மற்றும் கனடா விரிசல் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளமை தொடா்பாக இருமுறை கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு உரிய பதிலளிக்காமல் கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தவிர்த்துள்ளார். ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் வந்துள்ள ஜஸ்டின் ட்ரூடோவிடம் செய்தி நிறுவனம் ஒன்று இந்தியா தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. முக்கியமாக ‘உங்கள் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளதே?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், ஜஸ்டின் ட்ரூடோ இதற்கு பதிலளிக்காமல் சென்றுள்ளார்.

இதனையடுத்து தொடர்ந்து இரண்டாவது முறை ஐ.நா. வளாகத்தில் மற்றொரு இடத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த ஜஸ்டின் ட்ரூடோவிடம் செய்தியாளர் அதே கேள்வியை மீண்டும் முன்வைத்தார். அப்போதும் அவா் எந்த பதிலும் அளிக்காமல் அங்கிருந்து சென்றுள்ளார். கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியா மீது ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார்.

மேலும், தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரக உயரதிகாரியை வெளியேறவும் கனடா உத்தரவிட்டது. கனடாவின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த மத்திய அரசு, இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயரதிகாரியை வெளியேற உத்தரவிட்டு பதிலடி கொடுத்தது. இந்த விவகாரத்தால் இரு நாட்டு உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து கனடாவில் உள்ள இந்தியா்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது பாதுகாப்பாக இருக்குமாறும், அந்நாட்டுக்கு செல்லும் இந்தியா்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் வெளியுறவு அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.

இது தொடா்பாக கனடா குடியேற்றத் துறை அமைச்சா் மார்க் மில்லா் கூறுகையில், ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீக்கிய அமைப்புகள் கனடாவில் இந்தியாவுக்கு எதிராக பேரணி நடத்த திட்டமிட்டுள்ள நிலையிலும் கூட இங்குள்ள இந்தியா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில், உலகில் பாதுகாப்பான நாடு கனடா என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த சில நாள்களில் ஏற்பட்ட நிகழ்வுகளால் இரு நாட்டு உறவில் சற்று பதற்றம் உள்ளது. எனவே, அனைவரும் அமைதி காப்பதுதான் இப்போதைய தேவையாகும்’ என்றார்.

இதனிடையே, இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் கனடாவில் முக்கிய நகரங்களில் இந்தியாவுக்கு எதிராக பேரணி நடத்த திட்டமிட்டுள்ளன. முக்கியமாக கடனாவில் உள்ள இந்தியத் தூதரகங்களை மூடக்கோரி அவற்றை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் கனடாவில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை கனடா அரசு நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button