கனடா

திடீரென கனடா- இந்தியா உறவு குறித்து மாற்றுக் கருத்தை வெளியிட்ட ஜஸ்டின் ட்ரூடோ

காலிஸ்தான் பிரிவினைவாதி கொலையில் புது டெல்லிக்கு இரகசிய தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் இருந்த போதும், இந்தியா உடனான உறவை மேலும் நெருக்கமானதாக மாற்றுவதற்கு கனடா எதிர்ப்பாத்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவது, கனடாவுக்கு மிகவும் முக்கியமானதாகும் என்று குறிப்பிட்டிருக்கும் ட்ரூடோ, உலக அரங்கில், இந்தியாவின் முக்கியத்துவம் வளர்ந்து வரும் நிலையில், அதனுடனான உறவின் முக்கியத்துவத்தை கனடா நன்கு அறிந்தே இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டுதான் இந்தோ-பசிபிக் கூட்டுக்கொள்கையை வெளியிட்ட நிலையில், அதனுடான உறவில் நாங்கள் கவனத்துடன் இருக்கிறோம் என்றும், இந்தியாவுடன் நெருக்கமான உறவை மேம்படுத்துவதில் தீவிரமாக இருப்பதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கு விசாரணையில், கனடாவுடன் இணைந்து, இந்தியாவும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் கனடா பிரதமர், அதே வேளையில், நாட்டின் சட்டத்தை பின்பற்றி, இந்த வழக்கில் உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டுவர அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து ஜனநாயக நாடுகளுக்குமே இது உரித்தானது, அந்தந்த நாடுகள் அதன் சட்டத்தை மிகத் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா், கனடாவில் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் இந்திய உளவு அமைப்புகளுக்குத் தொடா்பிருக்கலாம் என கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டை இந்தியா உறுதியாக மறுத்தது. இந்தியாவுக்கு எதிராக கனடாவில் செயல்படும் பயங்கரவாதிகள் மீது அந்த நாடு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியது. அதிலிருந்தே இந்தியா-கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கனடா தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கனடா பாதுகாப்பு அமைச்சா் பில் பிளோ், ‘நிஜ்ஜாா் கொலை தொடா்பான விசாரணை ஒருபக்கம் நடந்தாலும் இந்தியாவுடனான உறவைத் தொடா்வோம். இந்தோ-பசிபிக் உத்திபோல இந்தியாவுடனான உறவு கனடாவுக்கு முக்கியமானது’ என்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Back to top button