இலங்கை

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

தரமற்ற மருந்துப் பொருட்கள் இறக்குமதி மோசடிக் குற்றச்சாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்றைய தினம் காலையில் மாளிகாகந்தை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் தரமற்ற மருந்துப் பொருட்கள் இறக்குமதி மூலம் அரசாங்க நிதி பாரியளவில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக செயற்பட்ட காலத்தில் இந்த மோசடி நடைபெற்றிருந்தது. இந்நிலையில் அவரை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் லோசனா அபேவிக்கிரம உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜானக சந்திரகுப்த உள்ளிட்ட ஆறுபேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Back to top button