கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு தாக்குதல்: ஆளுநர் மகன் மீது விசாரணை
கொழும்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு இளம் பெண்ணை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மிலின் மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீன் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
கோடீஸ்வர வர்த்தகரின் மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, ஆளுநரின் மகனைக் கைது செய்வதற்காக யால பிரதேசத்தில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியை பொலிஸார் சுற்றிவளைத்தனர். எனினும், சந்தேகநபர் தப்பிச் சென்றதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, சந்தேகநபரின் சொகுசு ஜீப் மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பயணத்தடை விதிக்கப்பட்ட சந்தேகநபர் தப்பிச்சென்றார்
34 வயதுடைய அவுஸ்திரேலிய பெண் ஒருவர் குறித்த தாக்குதலுக்கு உள்ளாகி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டின் பேரில், பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்து சந்தேகநபருக்கு எதிராக பயணத்தடை பெற்றுள்ளனர்.
சந்தேகநபர் கதிர்காமம் பகுதிக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து, யால பிரதேசத்தில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசேட பொலிஸ் குழு விடுதியை சுற்றிவளைத்தபோது, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
தற்போது சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.