உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் புதிய சாதனை!

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தி வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தியாவில் ஹைதராபாத் மைதானத்தில் இன்றைய தினம் (09-10-2023) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 344 ஓட்டங்களை பெற்றது. லங்கை அணி சார்பில் அதிகப்பட்சமாக குசல் மெந்திஸ் 122 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 108 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸங்க 51ஓட்டங்களையும் பெற்றனர்.பாகிஸ்தான் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் ஹலி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து, 345 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியை பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய மொஹமட் ரிஷ்வான் ஆட்டமிழக்காது 134 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

மேலும், அப்துல்லா ஷபீக் 113 ஓட்டங்களையும், சவுத் ஷகீல் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.பந்து வீச்சில் டில்ஷான் மதுசங்க அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். குறித்த போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மொத்தம் 4 சதங்களை அடித்துள்ளது. இது வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது. இதேவேளை, ஐசிசி 50 ஓவர் உலக கிண்ணத் தொடரில் ஒரே போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து நான்கு சதங்களை அடித்தது இதுவே முதல்முறையாகும்.