சுவிஸ் நாட்டில் வானில் தோன்றிய மர்ம ஒளி குறித்து மக்களிடையே குழப்ப நிலை!
நேற்று சுவிட்சர்லாந்து பொலிசாருக்கு வித்தியாசமான காரணம் ஒன்றிற்காக தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. நேற்று இரவு, சுவிட்சர்லாந்தில் வானில் வித்தியாசமான ஒளி தோன்றுவதை ஏராளமானோர் பார்த்துள்ளார்கள். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் அது தொடர்பாக பொலிசாரையும் அழைத்துள்ளார்கள்.
சுவிட்சர்லாந்து நாட்டின் மையப்பகுதியில் காணப்பட்ட அந்த ஒளியை பலர் புகைப்படமும் எடுத்துள்ள நிலையில், அது என்ன மர்ம ஒளி என்று தெரியாமல் பலர் திகைப்படைந்துள்ளனர். அந்த ஒளி உருவாகக் காரணமாக இருந்தது எலான் மஸ்க்தான் என்பது பின்னர் தெரியவந்துள்ளது. ஆம், டெஸ்லா நிறுவனரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன முதன்மைப் பொறியாளருமான எலான் மஸ்க், தனது ஸ்டார்லிங்க் இணைய சேவைக்காக விண்ணில் ஏவிய 52 சிறிய சேட்டிலைட்கள்தான் அந்த ஒளிக்குக் காரணம்.
நேற்று ராக்கெட் ஒன்றின் மூலம் அந்த சேட்டிலைட்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. அவைதான் நேற்று சுவிஸ் மக்களுக்கு குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன.