நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடைமுறை: 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுமென எச்சரிக்கை
பொதுப் போக்குவரத்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வோருக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ எச்சரித்துள்ளார்.
பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு குற்றவியல் சட்டத்தின் 345ஆம் பிரிவுக்கு அமைய 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பொது போக்குவரத்துகளில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர அண்மையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்பவர்களுக்கு எதிராக இந்த விசேட நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கமைய இரகசியமான முறையில் கமரா பொறுத்தப்பட்ட சிவில் உடை அணிந்த பொலிஸ் உத்தியோதகத்தர்கள் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மேலும் பெண்களுக்கு பொது போக்குவரத்துகளில் இடையூறு ஏற்படுத்துவோர் தொடர்பில் அறிவிப்பதற்கு 109 எனும் அவசர இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.