இலங்கை

மோசமான கட்டத்தில் இலங்கை: பொய்யான தகவல்களால் மக்களை ஏமாற்றும் அரசு

ஜனவரி மாதத்தில் பணவீக்கம் 7 வீதமாக உயரும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் நிச்சயமாக ஜனவரி மாத பணவீக்க வீதம் 9 வீதத்திற்கு மேல் உயரும் வாய்ப்புகள் அதிகம் என இலங்கையின் வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் அமிந்த மெத்சிலா பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் பணவீக்கத்தை சராசரியாக 4-6 சதவீதமாக பராமரிக்க முடியும் என்று ஆளுநர் நம்பிக்கை தெரிவித்தாலும், தற்போதைய விலை உயர்வு மற்றும் பொருளாதார சூழலின் படி பணவீக்கம் ஆண்டு முழுவதும் இதை விட அதிகமாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், பணவீக்கம் 2.5 வீதத்தால் அதிகரிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கணித்திருந்த போதிலும், எதிர்வரும் ஏப்ரல் பண்டிகை காலப்பகுதிக்குள் பணவீக்கம் 9-10 வீதமாக அதிகரிப்பதை நிறுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில வர்த்தகர்கள் VAT வரியை பயன்படுத்தி பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை உயர்த்தி வருவதாகவும், ஆனால் அரசாங்கம் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான் இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் குறைந்த அளவிலான பொருளாதார வளர்ச்சியும் பணவீக்க உயர்வை பாதிக்கிறது மற்றும் அரசாங்கம் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்த்தாலும், சர்வதேச நாணய நிதியம் பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Back to top button