இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் வரி அடையாள எண் பெறுவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய தீர்மானம்
இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் கட்டாய வருமான வரி பதிவு செய்வதை எதிர்ப்பவர்கள் வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு மறைமுக ஆதரவாளர்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிக முக்கிய தீர்மானம்
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் வரிக் கோப்பினைத் திறந்து, அதனுடன் தொடர்புடைய எண்ணை வழங்க உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் எடுத்த தீர்மானம் மிக முக்கியமான நடவடிக்கை. வரி எண்ணைக் கொண்டிருப்பது அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என அர்த்தமல்ல. இதன் மூலம் பிரஜைகள் தொடர்பான துல்லியமான தரவு முறைமை உருவாக்கப்படும். இதுவரை வரி செலுத்தும் கட்டமைப்பில் இல்லாதவர்கள் மற்றும் வேண்டுமென்றே வரி செலுத்துவதைத் தவிர்க்கும் நபர்களை அடையாளம் காண்பதற்கான பின்னணியை இது வழங்கும்.
ஒரு நாட்டில் 18 ஆண்டுகள் நிறைவடைந்த ஒவ்வொரு நபருக்கும் வரி எண் இருக்க வேண்டும் என்றும், அவர்களின் வருமானம், செலவுகள் மற்றும் சொத்துக்கள் குறித்த சரியான தகவல்களை வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் வரி அட்டவணையை அரசு உருவாக்க முடியும். இத்திட்டம் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். வரி ஏய்ப்பு செய்பவர்களை இனங்கண்டு, முறைப்படி வரி செலுத்துபவர்களாக அமைப்பதற்கான பின்னணியை இது வழங்கும்.
மேலும், ஒன்லைனில் வரி எண் பெறுவதில் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை உள்ளது, இதனால் பதிவு பெறுவதில் மக்களின் ஆர்வம் குறையலாம். வரி எண்ணைப் பெற விரும்பும் கிராமப்புற மக்கள் சிரமமின்றி, வரி எண் பெறும் முறைகளை எளிமையாக்குவது வருவாய்த் துறையின் பொறுப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.