கனடா

இந்திய கனடா விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலைப்பாடு இதுதான்: உறுதி செய்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்

கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலிருக்கும் கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேரை திருப்பி அழைத்துக்கொள்ளுமாறு இந்தியா கனடாவை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், கனடாவும் வேண்டும், இந்தியாவையும் விடமுடியாது என்னும் மன நிலைமையில் அமெரிக்கா முதலான மேற்கத்திய நாடுகள் நிதானமான அணுகுமுறையைக் கைக்கொண்டுவருகின்றன.

கனடா இந்திய விவகாரம் தொடர்பாக பிரித்தானிய பிரதமரான ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து, கனடா இந்திய விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலைப்பாடு என்ன என்பதை பிரித்தானிய பிரதமர் ரிஷி வெளிப்படுத்தியுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ அனைத்து நாடுகளும் இறையாண்மை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதுதான் தங்கள் நிலைப்பாடு என பிரித்தானியா நேற்று, அதாவது, வெள்ளிக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமருடன் பேசிய பின்னர், பிரித்தானிய அரசு செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ’அனைத்து நாடுகளும், தூதரக உறவுகளுக்கான வியன்னா மாநாட்டின் கொள்கைகள் உட்பட, இறையாண்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் என்ற பிரித்தானியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Back to top button