ஆன்மிகம்

செவ்வாய் பகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க செய்ய வேண்டிய வழிபாடு

நவகிரகங்களில் மங்களகாரகனாக திகழக்கூடியவர் தான் செவ்வாய் பகவான்.

அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்குரிய கிழமையாக செவ்வாய்க்கிழமை திகழ்கிறது.

செவ்வாய் பகவான் நிலம், கடன் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் காரண கர்த்தாவாக திகழக்கூடியவர்.

செவ்வாய்க்கிழமை அன்று நாம் எந்த ஒரு நல்ல காரியத்தை செய்தாலும் அந்த காரியம் வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து நீங்குவதற்கு முருகப்பெருமானை எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செவ்வாய் பகவானுக்குரிய அதி தேவதையாக திகழக்கூடியவர் முருகப்பெருமான் என்பதால் செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

முருகப்பெருமானை வழிபடுவதற்கு என்று பல வழிமுறைகள் இருந்தாலும் செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நீங்கி தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடைய வேண்டும் என்றால் எப்படி வழிபட வேண்டும் என்று தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

செவ்வாய்க்கிழமை அன்று காலையில் எழுந்து குளிப்பதற்கு முன்பாக நாம் குளிக்கும் தண்ணீரில் “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை மூன்று முறை கூற வேண்டும்.

பிறகு தான் அந்த தண்ணீரால் தலைக்கு குளிக்க வேண்டும். சுத்தமாக குளித்து முடித்த பிறகு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி முருகப் பெருமானின் கவசங்கள் எது தெரியுமோ அதை நிறுத்தி நிதானமாக கூற வேண்டும்.

அன்று முழுவதும் விரதம் இருக்க வேண்டும். பால் பழம் இவற்றை உண்ணலாம். பிறகு அன்று மாலை அருகில் இருக்கும் முருகனின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

அவ்வாறு செல்லும் பொழுது முருகப்பெருமானுக்கு செவ்வரளி பூக்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

பிறகு முருகப்பெருமானின் சன்னதியில் ஒரு புதிய அகலை வாங்கி வைத்து அதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

அந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து “ஓம் சண்முக பதயே நமோ நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

பிறகு வீட்டிற்கு வந்து விளக்கேற்றி வைத்து முருகப்பெருமானுக்கு முன்பாக அமர்ந்து கந்த சஷ்டி கவசத்தை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறையும் பாராயணம் செய்யும் பொழுது நிறுத்தி நிதானமாக தான் படிக்க வேண்டும்.

முருகனுக்கு கற்பூர தீபாராதனை காட்டி முடித்துவிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.

இப்படி தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தோறும் நாம் முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் நம் வாழ்வில் தடைப்பட்டிருக்கும் அனைத்து காரியங்களும் தடையின்றி நடைபெறும் என்பதோடு மட்டுமல்லாமல் செவ்வாய் பகவானால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் நீங்கப்படும் என்று கூறப்படுகிறது.

முருகப் பெருமானை நினைத்து மந்திரத்தை கூறினாலும் சரி கவசத்தை படித்தாலும் சரி முழு நம்பிக்கையுடன் செய்தால் அதற்குரிய பலனை கண்டிப்பான முறையில் நாம் அனுபவிப்போம்.

Back to top button