தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1000.. வீடு தேடி வழங்கப்படும் விண்ணப்பம் தொடர்பில் தகவல்!
தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இன்று விண்ணப்பங்கள் வீடுகளில் வந்து வழங்கப்பட உள்ளன. குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இந்நிலையில் எப்போதிலிருந்து கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்ற கேள்வி இருந்தது. சந்தேகத்தை தீர்க்கும் விதமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இதேவேளை, இன்று இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும். அதில், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, எப்போது கொடுக்க வேண்டும் என்ற தேதி அதில் குறிப்பிட்டிருக்கும். அதனால், நீங்கள் உடனே விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என அவசியமில்லை. பின்பு, அதில் சில விடயங்கள் கேட்கப்பட்டு இருக்கும். அதாவது, உங்களுடைய ஆதார் விவரங்களை நிரப்ப வேண்டும். அதனால், உங்களது ஆதார் விவரங்களை சரிபார்க்க வேண்டும். முக்கியமாக மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இதனையடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அதில் குறிப்பிட்டிருந்த தேதியில் எடுத்துச் செல்ல வேண்டும். அப்போது, ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் போனையும் கொண்டு செல்ல வேண்டும். அதில் தான் அப்ளிகேசன் வேலைகள் நடக்கும். அப்போது ஓ.டி.பி (OTP) வரும். அதுமட்டுமல்லாமல், வங்கி கணக்கு அட்டை, மின்சார ரசீது, குடும்ப அட்டை ஆகியவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட தேதிக்கு முன் இந்த ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
யாருக்கெல்லாம் கிடைக்கும்?
1. ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்க முடியும்.
2. சொந்தமாக கார் வைத்திருப்போர் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது.
3. பெண் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெண் அரசு ஊழியர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடையாது
4. எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ, அந்தக் கடையில் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
5. மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்சபட்ச வயது ஏதுமில்லை.
6. 5 ஏக்கர் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 இல்லை.