இந்தியா

தமிழகத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய மூதாட்டி.., சிறப்பு விருது வழங்கி கௌரவித்த முதலமைச்சர்

ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய ஆயி பூரணம் அம்மாளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருது வழங்கினார். நாடு முழுவதும் 75 -வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது.

காலை 8 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களையும், விருதுகளையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்படி, ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

இவர், மறைந்த தனது மகள் ஜனனியின் நினைவாக கொடிக்குளம் பகுதியில் உள்ள 1.52 ஏக்கர் நிலத்தை தனது கிராமத்தில் உள்ள நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு வழங்கியுள்ளார். அதற்காக நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.

முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவருக்கு பாராட்டு தெரிவித்ததோடு குடியரசு தின விழாவில் முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

Back to top button