இந்தியா

இந்தியாவில் அயோத்தி ராமரை நேரில் தரிசிக்க அனுமன் வந்தாரா? கருவறைக்குள் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

அயோத்தி ராமர் கோயில் கருவறைக்குள் தெற்கு வாசல் வழியே அனுமன் வந்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றுள்ளது. பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் நேற்று முன்தினம் ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது. இந்திய பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை பூஜையில் கலந்து கொண்டார். மேலும், பெரிய பெரிய தொழிலதிபர்கள் முதல் பிரபலங்கள் வரை அயோத்தியில் குவிந்தனர்.

இந்நிலையில், நேற்று முதல் அயோத்தி ராமர் கோயிலில் பொதுமக்கள் தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ராமர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் ராமரை தரிசிக்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர். இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கருவறையின் தெற்கு வாசல் வழியே திடீரென குரங்கு ஒன்று நுழைந்து ராமர் சிலையை நோக்கி சென்றது. இதனால், கோயிலில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் குரங்கை நோக்கி ஓடினர்.

இதுகுறித்து ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “நேற்று மாலை 5:50 மணியளவில் தெற்கு வாசல் வழியாக கருவறைக்குள் நுழைந்த குரங்கு உற்சவர் சிலை அருகே சென்றது. இதைப் பார்த்த பாதுகாப்புப் பணியாளர்கள் உற்சவர் சிலையை குரங்கு தரையில் தூக்கி வீசிவிட கூடும் என பயந்து விட்டனர். ஆனால் பொலிஸார் குரங்கை நோக்கி ஓடியதும் குரங்கு அமைதியாக வடக்கு வாசலை நோக்கி ஓடியது.

அதன் கதவு மூடப்பட்டதால், கிழக்கு நோக்கி நகர்ந்து, பார்வையாளர்கள் கூட்டத்தை கடந்தது. பின்னர் யாருக்கும் சிரமம் ஏற்படாமல் கிழக்கு வாசல் வழியாக வெளியே சென்றது குழந்தை ராமரை பார்ப்பதற்கு அனுமனே நேரில் வந்துள்ளார் என பாதுகாப்பு பணியாளர்கள் கூறுகின்றனர்” என பதிவிட்டிருந்தது.

Back to top button