இந்தியாவில் தமிழகத்தில் பட்டாசு குடோன் வெடித்து 9 பேர் பரிதாப மரணம்! ரூ.3 லட்சம் நிவாரணம்
இந்திய மாநிலம் தமிழகத்தில் உள்ள பட்டாசு குடோனில் உள்ள பட்டாசுகள் வெடித்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள கிருஷ்னகிரி மாவட்டம், பழையபேட்டை முருகர் கோவில் செல்லும் வழியில் ரவி என்பவர் பட்டாசு குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் தொழிலாளர்கள் பலரும் வேலை செய்து வருகின்றனர். இன்று காலை எதிர்பாராத விதமாக பட்டாசு குடோன் வெடித்தது. இதில், 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிவிபத்தில் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் 3 வீடுகள் இடிந்த நிலையில் உள்ளன. இதில், கட்டட இடிபாடுகளில் பலரும் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், உயிரிழப்ப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. உயிரிழந்ததவர்களின் விவரம் இந்த விபத்தில், பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி, மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரித்திகா, மகன் ரித்திஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், குடோன் அருகில் உள்ள ஹோட்டல் கடை உரிமையாளர் ராஜேஸ்வரி, இப்ராஹிம், இம்ரான் ஆகியோரும் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த இப்ராஹிம், இம்ரான் ஆகியோர் குடோன் அருகே இருச்சக்கர வாகனத்தில் வந்தவர்கள். அவர்கள், அந்த வழியாக வந்த போது குடோனில் உள்ள சிலிண்டர் வெடித்து பைக்கின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இரங்கலையும் ஆறுதலையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.