இந்தியா

போராட்டத்தில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 90 ஆசிரியர்கள்: சென்னையில் பரபரப்பு

தமிழகத்தில், சென்னை டிபிஐ வளாகத்தில் நடைபெற்று வரும் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் அடுத்தடுத்து 90 ஆசிரியர்கள் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகம் எனப்படும் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் 4 ஆசிரியர் சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றன.

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினரும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கமும், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தினரும், டெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக்கூடாது என்று தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று பெய்த கனமழையும் பொருட்படுத்தாமல் நடத்திய போராட்டத்தில் 30 -க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனாலும், 4-வது நாளாக இன்று நடைபெற்ற போராட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், எத்தனை பேர் மயக்கம் அடைந்தாலும் சரி, உயிரை இழந்தாலும் சரி கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Back to top button