கேரளாவில் பிரார்த்தனை கூட்டத்தில் உயிர் தப்பிய குண்டு வைத்தவரின் மாமியார்: மனைவியை செல்போனில் அழைத்து எச்சரிக்கை
நேற்று முன்தினம் இந்திய மாநிலமான கேரளாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் கலந்து கொண்ட குண்டு வைத்த டொமினிக் மார்ட்டினின் மாமியார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். நேற்று முன்தினம் கேரளாவில் கொச்சி அருகே களமச்சேரியில் உள்ள சர்வேதேச மாநாட்டு அரங்கில் கிறிஸ்தவ பிரிவின் கீழ் யெகோவாவின் சாட்சிகள் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அங்கு, அவர்கள் பிரார்த்தனை செய்ய தொடங்கிய சில நிமிடங்களிலேயே குண்டு வெடிப்பு நடந்தது. உடனே, பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்த குண்டு வெடிப்பில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்திய கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் பொலிஸில் சரணடைந்தார். அவரை பொலிஸார் கைது செய்தவுடன், என்.ஐ.ஏ. மற்றும் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் 29 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், குண்டு வெடிப்புக்கு தேவையான வெடிபொருள்களை தயாரித்த விவரங்களை பற்றி கூறினார். மேலும், குண்டு வெடிப்பின் போது தீப்பற்றி எரிந்த காட்சிகளையும் அவர் காண்பித்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வைத்தது டொமினிக் மார்ட்டின் என்பதை என்.ஐ.ஏ அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, கேரளாவில் குண்டு வெடிப்பு நடந்த பிரார்த்தனை கூட்டத்தின் போது குண்டு வைத்த டொமினிக் மார்ட்டினின் மாமியார் கலந்து கொண்டிருக்கிறார். டொமினிக் மார்ட்டின் அப்போது, அவரை பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், டொமினிக் மார்ட்டினின் அழைப்பை அவரது மனைவி ஏற்கவில்லை. இதனால், டொமினிக் மார்ட்டினின் மாமியார் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இருப்பினும், அவர் அதிர்ஷ்டவசமாக குண்டு வெடிப்பின் போது உயிர் தப்பியுள்ளார்.