இந்திய நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றம் : புகைக் குண்டுகளுடன் நுழைந்த இருவர்
இந்திய நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு நபர்களால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவரும், திடீரென நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து, சர்வாதிகாரம் ஒழிக என்று கோஷம் எழுப்பியதாகவும், வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகைக் குண்டுகளை அவர்கள் கையில் வைத்திருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், திடீரென இரண்டு நபர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்ததையடுத்து அங்குள்ள உறுப்பினர்கள், துரிதமாக செயற்பட்டு, அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்ததால் எந்தவித குழப்பங்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி, மர்ம நபர்கள் இருவரும் அவைக்குள் நுழைந்ததால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டதுடன் பாதுகாப்புக் காரணங்களுக்காக சபை சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடங்கள் தெரிவிக்கின்றன. பலத்த சோதனைகளுக்கு பின்னரே நாடாளுமன்றத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்ற போதிலும் தற்போது கண்ணீர் புகை குண்டுகள் மக்களவைக்குள் கொண்டு சென்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தாக்குதல் தினத்தன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை, புதிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.