இந்தியா

நீட் தேர்வு விலக்கு மசோதா-மீண்டும் தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தியிருந்தார்.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராயப்பட்ட நிலையில் இக் குழு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

இந்த பரிந்துரையின் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் செப்டம்பர் மாதம் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.

இந்த மசோதா தமிழக கவர்னரின் ஒப்புதலுக்கு முதலில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதா தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி முதலில் எந்த முடிவும் எடுக்காமல் இருந்ததால் .
மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் அவ்வப்போது கவர்னர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அதன் பிறகு கடந்த 2022பெப்ரவரி மாதம் 1-ம் திகதி இந்த மசோதாவில் கையெழுத்திடாமல் அவையின் மறுபரிசீலனைக்கு கவர்னர் அதை திருப்பி அனுப்பினார்.

பின்னர் பெப்ரவரி மாதம் 8-ம் திகதி தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு அன்றைய தினமே கவர்னருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அந்த மசோதா மீது கவர்னர் உடனே கையெழுத்திடவில்லை.

அதன் பிறகு நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்திருந்தார்.

தற்போது நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மூலமாக தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “ஏற்கனவே விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பி இருந்தது. அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மறுவிளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சட்ட வல்லுனர்களின் கருத்தை பெற்று மீண்டும் மத்திய அரசுக்கு அடுத்த வாரம் பதில் அனுப்ப ஏற்பாடு செய்வோம். என்று கூறினார்.

Back to top button