பஞ்சாப் பொற்கோவில் அருகே மீண்டும் பயங்கரமாக வெடித்த பொருள்-பதற்றம்!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே கடந்த மே 6, மே 8 ஆகிய நாட்களில் அடுத்தடுத்து 2 முறை குண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் காயமடைந்த நிலையில் நேற்று இரவும் பயங்கர சத்தத்துடன் பொருள் ஒன்று வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது, பஞ்சாப்பில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. முதல்வராக பகவந்த் மான் உள்ளார். இந்நிலையில் தான் தற்போது அங்கு அவ்வப்போது பதற்றமான சூழல் நிலவுகிறது. மீண்டும் காலிஸ்தான் அமைப்பினர் தீவிரமாக செயல்பட முயன்று வருவதால் அவ்வப்போது மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகிறது.
அத்துடன், திடீரென குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்து வருவது பஞ்சாப் மக்கள் பதற்றமடைய செய்துள்ளது. குறிப்பாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில் மிகவும் புகழ்பெற்றது. இந்த கோவில் அருகே குண்டுகள் வெடிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
கடந்த 6ம் தேதி இரவு பொற்கோவில் அருகே ஹெரிடேஜ் தெருவில் முதல் முறையாக குண்டு வெடித்தது. இதில் ஒருவர் காயமடைந்தார். மேலும் சில கட்டடங்களில் இருந்த கண்ணாடி முகப்புகள் உடைந்தன. இதுபற்றி போலீசார் விசாரணையை தீவிரமாக தொடங்கினர். ஆனால் அதற்கும் அதாவது முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்த அடுத்த 24 மணிநேரத்தில் மே 8 ம் தேதி காலையில் ஹெரிடேஜ் தெருவின் பார்க்கிங் செய்யும் இடத்தில் மற்றொரு குண்டு வெடித்தது. இதிலும் ஒருவர் காயமடைந்தனர்.
அடுத்தடுத்து இந்த 2 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்ததால் மக்கள் பதற்றமடைந்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். இதற்கிடையே தான் நேற்று நள்ளிரவில் பொற்கோவில் அருகே உள்ள ஸ்ரீகுரு ராம்தாஸ் நிவாஸ் லாட்ஸ் அருகே அருகே பயங்கர சத்தத்துடன் பொருள் ஒன்று வெடித்து சிதறியது. அதிகளவில் சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு சில பொருட்களை கைப்பற்றினர். இருப்பினும் வெடித்தது எந்த பொருள் என்பதை கண்டறிவதில் சிரமம் நீடித்து வருகிறது. தொடர்ந்து போலீசார் , தடயவியல் பிரிவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் கமிஷனர் நௌனிஹால் சிங் கூறுகையில், “நள்ளிரவு 12.15 முதல் 12.30 மணியளவில் பலத்த சத்தம் கேட்டது. இது மற்றொரு குண்டு வெடிப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இன்னும் உறுதி செய்யவில்லை. அதுதொடர்பாக விசாரித்து வருகிறோம். மேலும் சந்தேகப்படும் நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.