இந்தியா

நீதிமன்ற காவலில் 8 நாட்கள் செந்தில் பாலாஜி தொடர்பில் நடக்கப்போவது என்ன? நீதிபதி விதித்துள்ள நிபந்தனைகள்

கடந்த 14ம் தேதி அமலாக்கத்துறையினரால் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

மேலும், விசாரணையின் முடிவில் நள்ளிரவு கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கிருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கோரி அளித்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. மேலும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது, அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தாசரிக்கு சில நிபந்தனைகளை நீதிபதி அல்லி விதித்துள்ளார். அதாவது,

செந்தில் பாலாஜியை விசாரணைக்கு மருத்துவமனையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லக் கூடாது * குற்றம் சாட்டப்பட்டவரின் உடல்நிலை மற்றும் அவரது சிகிச்சைக்கு எந்த இடையூறும் இல்லாமல் விசாரிக்க வேண்டும் * போதிய உணவு, இருப்பிடம் வழங்க வேண்டும் * மூன்றாம் தர விசாரணையை பயன்படுத்தக்கூடாது, செந்தில் பாலாஜியை துன்புறுத்தவோ மிரட்டவோ அச்சுறுத்தவோ கூடாது * மருத்துவ ஆலோசனைக்கு உட்பட்டு, செந்தில் பாலாஜியை குடும்பத்தினர் பார்க்க அனுமதிக்க வேண்டும். மேலும் 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு காணொலி காட்சி மூலம் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Back to top button