இந்தியா

சென்னை ஒரே இரவில் கனமழையால் ஸ்தம்பிதம் – 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட நிலைமை!

சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறார். 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூன் மாதத்தில் பெய்த கனமழை இதுதான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 1996ம் ஆண்டு மழை காரணமாக ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாம், கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே கனமழை பொழிவதாகவும், தென் சென்னை பகுதிகளில் இயல்பைவிட மூன்று மடங்கு அதிக மழை இருந்ததாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்றிரவு முதல் கொட்டிய கனமழையால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன, இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து சாலைகளில் உள்ள தண்ணீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மீனம்பாக்கத்தில் 14 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்ததால் மோசமான வானிலை காரணமாகவும் சென்னை வரவேண்டிய 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன. துபாய், அபுதாபி, லண்டனில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் சென்னையிலிருந்து கிளம்ப வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Back to top button