இந்தியா

இந்தியாவின் 2 ஆவது செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்ப செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா !

(AI) மூலம் இந்தியாவில் இரண்டாவது முறையாக பெண் செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளனர். தற்போதைய காலத்தில் தொழில்நுட்பம் மூலம் நாடு பல வளர்ச்சிகளை அடைந்துள்ளது. தொழிநுட்பம் முன்னேறுவதற்கேற்ப நாமும் அதனுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் பல்வேறு துறைகள் பல வளர்ச்சிகள் அடைந்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவில் நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ரோபோ வக்கீல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண், தனது உருவத்தை விர்ச்சுவலாக்கி அதன் மூலம் டேட்டிங் தளம் உருவாக்கி வாடிக்கையாளர்களை பேசி பழக வைத்து சம்பாதித்து வருகிறார். நியூயார்க்கில் உள்ள ஒரு பெண் ஒருபடி மேலே சென்று தனது கணவரை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி அதனுடன் பேசி வருகிறார். இதனையடுத்து, இந்தியாவில் முதல்முறையாக ஒடிசாவில் OTV என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மூலம் மெய்நிகர் செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்தனர். முதற்கட்டமாக ஒடியா மற்றும் ஆங்கில மொழியில் பேசும் வகையில் வடிவமைத்தனர்.

இதேவேளை, இந்தியாவில் இரண்டாவது முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் பெண் செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளனர். கன்னட தொலைக்காட்சியான ‘பவர் டிவி’யில் கன்னட மொழியில் பேசும் ஏஐ செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். “அனைவருக்கும் வணக்கம். நான் சௌந்தர்யா. இந்தியாவின் இரண்டாவது ஏஐ செய்தி வாசிப்பாளர். ஏஐ தொழில்நுட்பம் தனது தடத்தை அனைத்து துறைகளிலும் பதித்து வருகிறது. செய்தி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். என்னைப் போலவே வட இந்தியாவில் ஏஐ செய்தி வாசிப்பாளர் பணி செய்கின்றனர் ” என கூறி சௌந்தர்யா தன்னை அறிமுகம் செய்தார். இவர், செய்தி வாசிப்பாளராக மட்டுமல்லாது பவர் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை இயக்கவும் முயற்சி செய்து வருகின்றனர்.

Back to top button