இந்தியா

ஒடிசாவில் 2 மணிநேரத்தில் தொடர்ந்து 61 ஆயிரம் மின்னல்கள்: 12 பேர் பலியான பரிதாபம்

இந்திய மாநிலம் ஒடிசாவில் 2 மணி நேரத்தில் தொடர்ந்து 61 ஆயிரம் மின்னல்கள் வெட்டியதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் செப்டம்பர் 7 ஆம் திகதி வரை தீவிரமான வானிலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும் என்றும், அதனுடைய தாக்கத்தால், ஒடிசா மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், வாரத்தின் பிற்பகுதியில் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்றும், செப்டம்பர் 7 ஆம் திகதி வரை பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் வானிலை மையம் கூறியது.

ஒடிசாவில், கடந்த சனிக்கிழமையன்று 2 மணிநேரத்தில் தொடர்ந்து 61,000 மின்னல்கள் ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,14 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இதில், குர்தா மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரும், பலங்கிரி சேர்ந்த 2 பேரும் அங்குல், பௌத், தேன்கனல், கஜபதி, ஜகத்சிங்பூர் மற்றும் பூரியைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவரும் மின்னலில் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒடிசா அரசு சார்பில் கருணைத்தொகையாக ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து விஞ்ஞானிகள் தரப்பில்,நீண்ட இடைவெளிக்குப் பிறகு பருவமழை இயல்பு நிலைக்குத் திரும்புவதால் இந்த அசாதாரண நிலை ஏற்பட்டதாக கூறினர் .

Back to top button