தமிழகத்திற்கு எதிரான கர்நாடகா போராட்டத்தில் களமிறங்கிய நடிகர், நடிகைகள்!

இந்தியாவில் காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு எதிராக கர்நாடகாவில் நடைபெற்ற போராட்டத்தில், நடிகர் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதன் காரணமாக, காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு கர்நாடகாவை வலியுறுத்தியது.

ஆனால், போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், தண்ணீர் திறந்து விட முடியாதென்று கர்நாடகா திட்டவட்டமாக கூறியது. இதனையடுத்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. பின்பு, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு விவசாய அமைப்புகள், கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

அந்தவகையில், கர்நாடகா மாநிலம் ராமநகரில் கர்நாடக பாதுகாப்பு வேதிகே அமைப்பு சார்பில் நடந்த போராட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரது உருவப்படத்திற்கு பொட்டு வைத்தும், மாலை அணிவித்தும் இறுதிச்சடங்கு செய்தனர். இதன் காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பெங்களூருவில் பந்த் போடப்பட்டதையடுத்து, மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு கூட சிரமப்பட்டனர்.

இந்நிலையில், இன்று கர்நாடகாவில் பந்த் நடைபெற்று வருகிறது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளும் இயக்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் கன்னட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில், திரைப்பட மற்றும் நாடக நடிகர்கள் ஶ்ரீநாத், ஸ்ருதி, உமாஶ்ரீ, ரகு முகர்ஜி, அனு பிரபாகர், விஜய் ராகவேந்திரா, முரளி, நீனசம் சதீஷ், பூஜா காந்தி, பாமா ஹரீஷ், அனிருத், பத்மா வசந்தி, ரூபிகா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதே வேளையில், முன்னனி நடிகர்கள் யாரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.