இலங்கை

இலங்கை மக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

போலி வெளிநாட்டு விசாக்கள் அல்லது பயண ஆவணங்களை அதிக விலைக்கு ஏற்பாடு செய்யும் போலி பயண முகவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை நேற்று (29.1.2024) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோசடி செய்பவர்களால் எளிதில் ஏமாற்றப்படலாம் என்பதால், பயண ஆவணங்களை செய்து கொள்வதற்காக முகவர்களிடம் பெரும் தொகையை செலுத்தும் போது அவதானமாக இருக்குமாறு குடிவரவு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பயணி தனது விசா அல்லது வேறு ஏதேனும் பயண ஆவணத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் கொண்டால், அவர்கள் செல்ல விரும்பும் நாட்டின் அந்தந்த தூதரகம் அல்லது வெளிநாட்டு தூதரகத்துடன் அதைச் சரிபார்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. போலி இத்தாலிய விசாவுடன் சென்ற பயணி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (28) விமான நிலையத்தின் (BIA) புறப்படும் முனையத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த பயணி, மஸ்கட் நோக்கிச் செல்லும் WY-372 ஓமன் எயர் விமானத்தில் செல்வதற்காக பதிவு செய்திருந்த வேளை அவரிடம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அங்கு அவரது கடவுச்சீட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டபோது அவரது விசா போலியானது எனத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பயண முகவர் ஒருவர் அவருக்கு விசா ஏற்பாடு செய்ததாகவும், அவர் சேவைகளுக்காக 1 மில்லியனுக்கும் அதிகமான பணம் செலுத்தியதாகவும் கூறியிருந்தார்.

தனது கடவுச்சீட்டில் போலி விசா இருப்பது தெரியாமல் இருந்த பயணி மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்திலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களக் கிளையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே, போலி வெளிநாட்டு விசாக்கள் ஏற்பாடு செய்யும் போலி பயண முகவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு குடிவரவு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Back to top button