மீண்டும் கரூரில் ஐ.டி ரெய்டு- அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் சிக்கலில்!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய தமிழ்நாடு கரூரில் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. கடந்த மே மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூன் 2 ஆம் திகதி வரை செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் கொங்கு மெஸ் மணி உள்ளிட்ட ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது செந்தி பாலாஜிக்கு தொடர்புடைய ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட 5 இடங்களுக்கு சீல் வைத்தனர். பின்பு, சீல் வைத்த இடங்களை மீண்டும் ஜூன் 23 ஆம் திகதி சோதனை நடத்தினர். அப்போது கொங்கு மெஸ் உரிமையாளர் மணி மற்றும் அவருக்கு தொடர்பான இடங்களில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை, இன்று காலை முதலே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய கொங்கு மெஸ் மணி வசிக்கும் கரூர் ராயனூரிலும், சின்னாண்டான்கோவில் பகுதியில் உள்ள கொசுவலை நிறுவனத்திலும் வருமானத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கொங்கு மெஸ் உரிமையாளர் வீட்டில், 5க்கும் மேற்பட்ட கார்களில் 10க்கும் மேற்பட்ட வருமானத்துறை அதிகாரிகள், 50 துணை ராணுவப்படை வீரர்களின் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் பாலாஜி / senthil balaji இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் 14ம் தேதி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டார். பின்பு அவர், நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடைய உள்ளது.