நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவு! ஆஜராகிறார் செந்தில் பாலாஜி
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டார். பின்பு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்க துறைக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து, புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை 5 நாள்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்படுவார் என்று உத்தரவிடப்பட்டது. பின்பு, செந்திபாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதன்பிறகு, இவரது வழக்கை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியும், நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28 ஆம் திகதி வரை நீட்டித்தும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதனால், அப்பகுதியில் அதிகாலையில் இருந்தே பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.