இந்தியா

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்பு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கதுறைக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து, புழல் சிறையில் உள்ள செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதன்பிறகு, இவரது வழக்கை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியும், நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28 ஆம் திகதி வரை நீட்டித்தும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 15 -ம் திகதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமின் கோர முடியாது என்றும், ஜாமின் தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடவும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, வரும் 15 ஆம் திகதிக்குள் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் எனவும், வழக்கின் விசாரணையை 15 ஆம் திகதி ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்த போது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அல்லி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று செந்தில் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். எந்த காரணத்தினால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறித்து நீதிபதி குறிப்பிடவில்லை. இன்று இரவு இணையதளத்தில் தீர்ப்பின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னரே காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Back to top button