வழக்கில் லதா ரஜினிகாந்திற்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

கோச்சடையான் படத்திற்காக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் லதா ரஜினிகாந்திற்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய திரைப்படம் கோச்சடையான். இப்படத்தில் முதன்முறையாக மோஷன் கேப்சர் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டது, மீடியா ஒன் என்டர்டெயின்ட் சார்பில் முரளி தயாரித்திருந்தார். இதற்காக ஆர்ட் பீரோ என்ற நிறுவனத்திடம் ரூ.6.2 கோடி ரூபாயை முரளி கடனாக பெற்றிருந்தார். இதில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஜாமீன் கையெழுத்திட்டிருந்தார்.
இந்நிலையில் கோச்சடையான் பொருளாதார ரீதியாக தோல்வியடைந்த நிலையில், பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்ததாக முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி லதா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது, எனினும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என கூறியது. தொடர்ந்து பெங்களூரு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் லதா ரஜினிகாந்த் ஆஜராகாமல் இருந்ததால் ஜனவரி 6ம் திகதிக்குள் ஆஜராகாமல் இருந்தால் கைது செய்யப்படுவார் என கூறி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று லதா ரஜினிகாந்த் ஆஜரான நிலையில், பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.