இந்தியா

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு குறித்து ED பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்பு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கதுறைக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, புழல் சிறையில் உள்ள செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன்பிறகு, இவரது வழக்கை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியும், நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை நீட்டித்தும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி உத்தரவு பின்னர், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 15ஆம் திகதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமின் கோர முடியாது என்றும், ஜாமின் தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடவும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பின்னர், செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் ஜாமின் மனு மட்டுமல்ல, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள வழக்கையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. அமலாக்கத்துறைக்கு கெடு விதித்த நீதிமன்றம் இதனைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யபட்டது. இந்த மனு நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி பதில் மனுதாக்கல் செய்வதற்கு அவகாசம் வேண்டும் எனக் கேட்டார். அதற்கு, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறுகிய காலத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதற்கு நீதிபதி அல்லி, வரும் 15 ஆம் திகதிக்குள் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் எனவும், வழக்கின் விசாரணையை 15 ஆம் திகதி ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.

Back to top button