இந்தியா

ஆந்திராவில் தக்காளி விற்று 20 நாளில் ரூ.30 லட்சம் சம்பாதித்த விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்

இந்தியாவின் ஆந்திராவில், தக்காளி விற்ற பணத்தை கொள்ளை அடிப்பதற்காக விவசாயியின் கை மற்றும் கால்களை கட்டிவைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாமர மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தக்காளியா, தங்கமா என்று கேட்கக் கூடிய அளவுக்கு வந்துவிட்டது என்றும் சிலர் கூறுகின்றனர். சில திருமணங்களில் பரிசாக தக்காளியை கொடுக்கும் பழக்கமும் வந்துள்ளது. அதே போல், உத்திர பிரதேசத்தில் காய்கறிக்கடை வியாபாரி ஒருவர் ஒருபடி மேலே சென்று தக்காளியின் பாதுகாப்பிற்காக பவுன்சர்களை நியமித்திருந்தார். அத்தகைய தக்காளியை பதுக்க வேண்டாம் என்று அரசு உத்தரவிட்டிருந்தது.

இதேவேளை, ஆந்திர பிரதேச மாநிலத்தில் மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் ரெட்டி என்ற விவசாயி தனது தோட்டத்தில் தக்காளியை பயிரிட்டு அறுவடை செய்திருந்தார். அவர், தக்காளியை விற்பனை செய்து 20 நாள்களில் 30 லட்ச ரூபாய் வரை சம்பாதித்துள்ளார். மேலும், ராஜசேகர் ரெட்டி தக்காளியை பாதுகாக்க தனது தோட்டத்திலேயே தங்கியிருந்தார்.

இந்நிலையில், ராஜசேகர் ரெட்டி தனது தோட்டத்தில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். பின்பு, சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் உடலைக் கைப்பற்றினர். தக்காளி மூலம் விற்ற பணத்தை கொள்ளை அடிப்பதற்காக ராஜசேகர் ரெட்டியை கொலை செய்திருப்பதாகவும், கொலை செய்வதற்கு இருச்சக்கர வாகனத்தில் வந்திருப்பதாகவும் பொலிசார் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், கொலையாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் தக்காளிக்காக ஏற்பட்ட இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button