வடமேற்கு வங்கக்கடலில் உருவான ‘மிதிலி’ புயல் : 9 துறைமுகங்களுக்கு 2 -ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை வானிலை ஆய்வு மையம் வடமேற்கு வங்கக்கடலில் ’மிதிலி’ புயல் உருவானதை குறிக்கும் வகையில் 9 துறைமுகங்களில் 2 -ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வேணடும் என அறிவுறுத்தியுள்ளது.
‘மிதிலி’ புயல்
மத்திய மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
தொடர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவ.17) புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது.
இந்நிலையில், வடமேற்கு வங்கக்கடலில் ’மிதிலி’ புயல் உருவானதை குறிக்கும் வகையில் 9 துறைமுகங்களில் 2 -ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வேணடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல், வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.