இந்தியா

‘என்ன தான் நடக்கட்டுமே.. இருட்டினில் நீதி மறையட்டுமே’ என பாடல் மூலம் ED ரெய்டு குறித்து துரைமுருகன் கருத்து!

இன்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் அமலாக்கத்துறை சோதனை குறித்த கேள்விக்கு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பாடல் மூலம் பதில் அளித்துள்ளார். தமிழ்நாடு, சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2006 -2011 ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி செம்மண் எடுத்து அரசுக்கு 28 கோடி ருபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பதியப்பட்ட வழக்கில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்கில் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்துவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்கு அமலாக்கத்துறை அழைத்ததன் பேரில் தடயவியல் நிபுணர்கள் வருகை தந்தனர். டிஜிட்டல் முறையில் உள்ள ஆவணங்களை கண்டறியும் வகையில், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

அத்துடன் காலை 7 மணி முதல் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து சண்முகபுரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த மற்றொரு வீட்டின் கதவை திறந்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல், அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யுமான கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் முதலீடு தொடர்பாக கௌதம சிகாமணியின் ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏற்கனவே அமலாக்கத்துறை முடக்கியது.

இதேவேளை, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் அமலாக்கத்துறை சோதனை குறித்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. duraimurugan / துரைமுருகன் இதற்கு அவர், என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே என்ற பாடலை பாடி பதில் அளித்துள்ளார். தற்போது இது பேசுபொருளாக உள்ளது.

Back to top button