இலவச சட்ட ஆலோசனை மையம் விரைவில்! விஜயின் அடுத்த திட்டம்
நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் விரைவில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கவிருப்பதாக புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி சில ஆண்டுகளாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல உதவிகளை செய்து வரும் விஜய், கண் தான திட்டம், குருதி கொடை, குழந்தைகளுக்கு பால், ரொட்டி வழங்கும் திட்டம் போன்ற உதவிகளை செய்து வருகிறார்.
மேலும், நடிகர் விஜய் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கியும், 234 தொகுதிகளிலும் ஏழைஎளிய மாணவர்கள் கல்வி பயில ‘தளபதி விஜய் பயிலகம்’ என்னும் இரவுநேர பாட சாலை திட்டம் தொடங்கப்பட்டும் மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், மாணவர்களிடம் ஓட்டுக்காக பணம் வாங்க வேண்டாம் என பெற்றோர்களிடம் கூறுங்கள் என்ற பேச்சும் பேசுபொருளானது. மேலும், நடிகர் விஜய் அரசியலுக்கு நுழைவதற்கு ஆயத்தங்கள் மேற்கொண்டு வருவதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதேவேளை, விஜய் மக்கள் இயக்கத்தை வலுவாக மாற்றுவதற்கு விஜய் ஈடுபட்டு வருகிறார். பனையூரில் உள்ள இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். அந்தவகையில், இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் வழக்கறிஞர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்பு கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்,”கூட்டத்தில் நிறைய கருத்துக்கள் பேசியிருக்கிறோம். அதனை பற்றி விஜயிடம் ஆலோசிக்கவுள்ளோம். விரைவில் சென்னையில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கவிருப்பதாகவும், விஜய் மக்கள் இயக்கத்தின் மீது வழக்குகள் போட்டால் அதை சட்ட ரீதியாக அணுகி வெல்ல வேண்டும் அறிவுரை கூறியுள்ளோம்” என அவர் பேசினார்.