ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி பயங்கர விபத்து – ரத்த தானம் வழங்க குவிந்த மக்கள்
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய கோரமண்டல் ரயிலில் சென்னை நோக்கி 867 பயணிகள் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசாவின் பாலாசூர் பகுதியில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 288 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த ரயில் விபத்தில் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்தியாவின் மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக பதிவாகியுள்ள இந்த விபத்தில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் சிக்கியுள்ளது. இதில் 867 பயணிகள் வரை சென்னைக்கு பயணம் செய்து கொண்டு இருந்ததாகவும், முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 80 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, ரயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்கள் குறித்து அவர்களது உறவினர்களுக்கு தகவல்கள் வழங்க சென்னை உள்ள எழிலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைகளின் தொலைபேசி எண்கள்: 1070, 044-28593990, 9445869848. ரயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை துரிதப்படுத்துவதற்காக இரண்டு தமிழக அமைச்சர்கள் ஒடிசா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி கட்டுப்பாட்டு அறையை இன்று காலை ஆய்வு செய்ய இருக்கிறார்.