சுயநினைவின்றி இருந்தேன்.,விஜயகாந்த் வந்த 5 நிமிடத்தில் எல்லாம் மாறியது: ரஜினிகாந்த் உருக்கம்
மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடல், பொதுமக்கள், திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு நடிகர் விஜய், அர்ஜூன், விஜய்சேதுபதி ஆகியோர் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தனர்.
இந்நிலையில் நெருங்கிய நண்பரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான ரஜினிகாந்த் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பூத உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அத்துடன் விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்கள் இருவருக்கும் ஆறுதல் வழங்கினார்.
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், விஜயகாந்த் அன்பிற்கு முன் அனைவரும் அடிமையாகிவிடுவார்கள் என தெரிவித்துள்ளார். விஜயகாந்த் மரணம் மன வேதனையாக உள்ளது, நட்பிற்கு இலக்கணம் என்றால் அது விஜயகாந்த் தான். அதன் காரணமாகவே அவருக்கு இவ்வளவு அதிகமான நண்பர்கள்.
விஜயகாந்த் தன்னுடைய நண்பர்கள் மீது கோபப்படுவார், அதைப்போல அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மீது கோபப்படுவார், ஆனால் அவர் மீது யாருக்கும் கோபம் வராது, ஏனென்றால் விஜயகாந்தின் அவரது கோபத்திற்கு பின்னால் நியாயம் இருக்கும், அன்பு இருக்கும்.
விஜயகாந்த் தைரியத்திற்கும், வீரத்திற்கும் இலக்கணமானவர், ஒரு முறை எனக்கு உடல்நிலை சரியில்லாமல் சுயநினைவு தப்பி ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது அங்கு ரசிகர்கள், மீடியாக்கள் என அதிக கூட்டம் வந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாத சூழல் இருந்தது.
அப்போது அங்கு வந்த விஜயகாந்த் 5 நிமிடத்தில் என்ன செய்தார் என்று தெரியவில்லை, ஆனால் அங்கிருந்த அனைவரையும் அப்புறப்படுத்தினார். மேலும் வீட்டிற்கு திரும்பிய போது எனது வீட்டிற்கு அருகிலேயே ரூம் போடுங்கள், அருகில் யார் வருகிறார்கள் என்று நான் பார்த்துக் கொள்கிறேன் என விஜயகாந்த் சொன்னார். அதை என் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க மாட்டேன் என ரஜினிகாந்த் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.