தமிழக அரசியலில் மீண்டும் திமுக-வில் முக அழகிரி? பிரம்மாண்டமான விழாவில் நடக்கப்போவது என்ன?
தமிழகத்தின் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகன்கள் முக அழகிரி மற்றும் முக ஸ்டாலின் மீண்டும் ஒன்றிணையப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. திமுகவின் தென்மண்டலஅமைப்பு செயலாளர், மத்திய அமைச்சர் என முக்கியமான பொறுப்புகளில் இருந்த முக அழகிரி, தந்தையுடனான மோதலால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். தொடர்ந்து திமுகவில் மீண்டும் இணைவதற்காக முக அழகிரி எடுத்துக் கொண்ட முயற்சிகளும் வீணாகிப் போனது, மேலும் முக ஸ்டாலின் மற்றும் முக அழகிரி இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்வதையும் தவிர்த்துக் கொண்டனர்.
இதேவேளை, இருவரையும் ஒன்று சேர்க்க சகோதரி செல்வி தொடர்ந்து முயற்சிகள் செய்து வந்ததாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே நேற்று தயாளு அம்மாளின் 90வது பிறந்தநாளை கொண்டாட அனைவரும் ஒன்றிணைந்தனர். குடும்பத்தினருடன் கலந்து கொண்ட முக அழகிரி. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பேசியதாக தெரிகிறது. ஒருமணிநேரத்துக்கும் மேலாக இருவரும் சந்தித்ததுடன் பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக முக அழகிரி மீண்டும் திமுக-வில் இணைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக மதுரையில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாகவும், தென் மாவட்டங்கள் மீண்டும் அழகிரியின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் எனவும் தெரிகிறது. இதுதவிர தன்னுடைய மகன் தயாநிதிக்கு மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கும்படி அழகிரி கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ஸ்டாலினும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் பேசப்படுகிறது.