கனடாவில் கல்வி கற்க விரும்பிய இந்திய மாணவர்களுக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்!

கனடாவிலுள்ள கல்லூரி ஒன்றில் கல்வி கற்பதற்கு தயாராக இருந்த இந்திய மாணவர்கள் சிலருக்கு ஏமாற்றத்தையளித்துள்ளது கனடாவிலுள்ள கல்லூரி ஒன்று. இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் கனடாவின் Scarboroughவிலுள்ள Northern College எனும் கல்லூரியில் பயில்வதற்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருந்திருக்கிறார்கள். செப்டம்பரில் வகுப்புகள் துவங்க இருக்கும் நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் கனடாவிலிருக்கலாம் என்ற கனவில் மாணவர்கள் காத்திருக்க, திடீரென அவர்களுடைய விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கல்லூரி நிர்வாகம் தகவல் அனுப்பியுள்ளது. விடயம் என்னவென்றால், மாணவர்கள் பலர் விமான டிக்கெட்களை வாங்கிவிட்டு, தங்குமிடத்துக்கும் பணம் செலுத்திவிட்டார்கள்.
இந்நிலையில், கனடாவிலுள்ள கல்லூரிகள் பல வருவாய்க்காக வெளிநாட்டு மாணவர்களை நம்பியிருப்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம். உள்ளூர் மாணவர்களைவிட, வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதையும் பலரும் அறிந்திருக்கக்கூடும். அத்துடன், விண்ணப்பிக்கும் எல்லா மாணவர்களுக்கும் விசா கிடைக்கப்போவதில்லை என்ற எண்ணமும் கல்லூரி நிர்வாகிகளுக்கு உள்ளதால், இந்தக் கல்லூரிகள், கல்லூரியில் இருக்கும் இடங்களைவிட அதிக விண்ணப்பப் படிவங்களை விநியோகிக்கின்றன. ஆக, எதிர்பார்த்ததைவிட அதிக மாணவர்கள் கல்வி கற்க தகுதி பெற்றுவிட்டதால், அவர்கள் அனைவருக்கும் இடமளிக்க இயலாத அந்தக் கல்லூரி, அந்த மாணவர்களின் விண்ணப்பங்களை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முழு கல்விக்கட்டணத்தையும் திருப்பித் தருவதாகவும், அல்லது, வேறு கல்லூரிகளிலிருந்து ஆஃபர் கடிதங்கள் பெற்றுத்தருவதாகவும், இந்தக் கல்லூரியில் மாணவர்கள் கட்டியுள்ள கல்விக் கட்டணத்தை அந்தக் கல்லூரிகளுக்கு செலுத்திவிடுவதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.