இந்தியா விழிப்புணர்வின் பொருட்டு நடத்தும் பிரம்மாண்ட சிறுதானிய உணவு திருவிழா: இந்தோனேசியாவில் கலைக்கட்டும் நிகழ்ச்சி
இந்தோனேசியாவில் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உணவுத் திருவிழாவுக்கு இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. சிறு தானியங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை ஆசியாவுக்கான கூட்டமைப்பு நாடுகளுக்கு எடுத்து காட்டுவதற்காக இந்தோனேசியாவில் உணவு திருவிழா ஒன்றை இந்தியா ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து ஆசியாவுக்கான இந்திய தூதர் ஜெயந்த் கோப்ரகடே வழங்கிய தகவலில், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய ஆசியானுக்கான கூட்டமைப்பில் உள்ள 10 நாடுகளை சேர்ந்த மக்களின் சிறந்த உணவுக்கான தேர்வாக சிறுதானியங்களை மாற்றி அமைக்கவும், அவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்தியா இந்த உணவு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது என தெரிவித்துள்ளார். 5 நாட்கள் நடைபெறும் இந்த உணவு திருவிழாவை ஆசியானுக்கான இந்திய தூதரகம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 7ம் திகதி இந்திய பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆசியான்- இந்தியா மாநாட்டில் உணவு பாதுகாப்பு குறித்த கூட்டறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மாநாடு நடைபெற்று இரண்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில், இந்த சிறுதானிய உணவு திருவிழாவை நாங்கள் நடத்தி காண்பித்துள்ளோம் என ஆசியானுக்கான இந்திய தூதர் ஜெயந்த் கோப்ரகடே தெரிவித்துள்ளார். மேலும் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.