இந்தியா

நிலவின் முதல் புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரோ – வரலாறு படைத்த சந்திரயான்-3!

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ள நிலையில், நிலவில் லேண்டர் எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்த உலகமும் திரும்பி பார்க்கும் வகையில் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவ பகுதியில் இந்திய நேரப்படி மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14ம் திகதி சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட்டது.

நிலவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது, இருப்பினும் நிலவின் தென் துருவ பகுதியில் எந்தவொரு நாடும் இதுவரை தங்களது விண்கலங்களை தரையிறக்கியது இல்லை. அப்படி இருக்கையில், நிலவின் தென் துருவப் பகுதியில் முதல் நாடாக இந்தியா தங்களது சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது. இந்நிலையில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான் 3 லேண்டர், நிலவில் எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படத்தின் மூலம் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்குவதற்கு தட்டையான பரப்பை துல்லியமாக தேர்ந்தெடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் புகைப்படத்தில் லேண்டர் கால் பகுதியும், அதன் நிழலும் இருப்பதை பார்க்க முடிகிறது.

Back to top button