திமுக எம்.பி தொடர்புடைய இடங்களில் IT Raid நிறைவு – பிணவறையில் மூட்டை மூட்டையாக சிக்கிய பணம்!
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மருத்துவக்கல்லூரி பிணவறையில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரக்கோணம் தொகுதி திமுக எம்.பியும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகன், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, நட்சத்திர விடுதிகள் போன்றவற்றை நடத்தி வருகிறார்.
இவர், தன்னுடைய தொழில்கள் மூலம் வரும் வருவாயை முறையாக கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு நடத்தியதாக புகார் எழுந்தது. பின்பு, ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது மகள், மருமகள், உறவினர்களுக்கு தொடர்புடைய 70 -க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி புலனாய்வு பிரிவு கடந்த 5 -ம் திகதி முதல் சோதனை நடத்தி வந்தனர். வருமானவரித்துறை நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது. மேலும், கணக்கில் வராத ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், வருமானவரித்துறை சோதனை நிறைவடைந்த நிலையில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி பிணவறையில் மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.