தமிழக அமைச்சர் சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு

இந்திய தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் சொத்துகுவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. இந்திய மாநிலம் தமிழக மீன்வளத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்னன் இருந்து வருகிறார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தார்.
இதன்போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி இவர் மீது கடந்த 2006 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு, கடந்த 2020 ஆம் ஆண்டு சட்டபணபரிவர்த்தனை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அனிதா ராதாகிருஷ்னன் மற்றும் அவரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தியது. மேலும், அனிதா ராதாகிருஷ்னன் வருமானத்திற்கு அதிகமாக 2.76 கோடி சொத்து சேர்த்ததாக கூறி வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அனிதா ராதாகிருஷ்னன் மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்களை முடக்கியது.
அதன்பின், அனிதா ராதாகிருஷ்னன் சொத்துகுவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்க கோரி தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவின் மீதான விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்றது. அப்போது, அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துகுவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் 80% விசாரணை நடந்து முடிந்ததாக கூறி அமலாக்கத்துறையை சேர்த்துக் கொள்ள முடியாது என தெரிவித்தது. பின்னர், இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆகஸ்ட் 2 ஆம் திகதி விசாரணையை ஒத்திவைத்தார். இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.