” 2026-ல் கப்பு முக்கியம் பிகிலு”- சட்டமன்ற தேர்தல் குறித்த விஜயின் மறைமுக அறிவிப்பு?
நடிகர் விஜய் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில், ”2026-ல் கப்பு முக்கியம் பிகிலு” என்று பதில் கூறியது 2026 சட்டமன்ற தேர்தலை குறிக்கிறதா என்று சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் ரூ. 540 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி நடைபோடுகிறது. இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் பங்கேற்றியதை தொடர்ந்து விழாவில் கடைசியாக நடிகர் விஜய் பேசினார்.
இந்நிலையில் தளபதி என்று ரசிகர்கள் தன்னை அழைப்பதற்கான அர்த்தம் ”தளபதி என்றால் உங்களுக்கு கீழ் வேலை செய்கிற தளபதி நான். மக்களாகிய நீங்கள்தான் மன்னர். நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன்” என்று விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து விஜய்யிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது, அப்போது 2026 என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ” 2025 க்கு அப்றம் வர வருஷம் என்ன? உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி நடக்கப் போகுது. இன்னும் சீரியஸாவா… 2026 கப்பு முக்கியம் பிகிலு” என்று பதில் அளித்தார். 2026-ல் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விஜய் தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில் அதை மனதில் வைத்துதான் விஜய் 2026 இல் கப்பு முக்கியம் பிகிலு என்று கூறியதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.