இந்தியா

மணிப்பூரில் மாணவர்கள் படுகொலையை தொடர்ந்து மீண்டும் வெடித்த போராட்டம்!

மணிப்பூர் மாநிலத்தில் ‘மைத்தேயி’ இனக்குழு மாணவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அம்மாநிலத்தில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி, குக்கி இனக்குழுக்களிடையே கடந்த மே மாதம் மோதல் வெடித்தது. இந்த மோதல் பல மாதங்களாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் மணிப்பூரில் சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்கள் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

புகைப்படங்கள் குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில், கடந்த(06.07.2023)ஆம் திகதி காணாமல் போன பிஜாம் ஹெம்ஜித்(20), ஹிஜாம் லிந்தோயிங்கம்பி(17) ஆகிய இரு மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நள்ளிரவிலும் போராட்டம்

இந்த புகைப்படத்தில் ஆயுதம் தாங்கிய கும்பலால் பிணைக் கைதியாகப் பிடித்துவைத்திருப்பது போன்றும், பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்த இரண்டு மாணவர்கள் படுகொலைக்கு எதிராக மணிப்பூர் மாநிலத்தில் பல பகுதிகளில் நள்ளிரவிலும் இந்தப் போராட்டம் நீடித்துள்ளது.

போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தியதோடு மணிப்பூரில் கல்வி நிறுவனங்கள் 3 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி மணிப்பூர் மாநிலத்தில் இணையசேவை மீண்டும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button