அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலையில் முன்னேற்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த 13-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலும் வழங்கப்பட்டது.

தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அவ்வாறு அதிமுகாவினரால் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான இரா.காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது மாத்திரம் இன்றி கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் மற்றும் தொடர்புடையவர்கள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 26-ந்தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையை தொடங்கினர் என்பதும் குறிப்பிட்ட தக்கது.

இவை இப்படியிருக்க அவருக்கு சார்பாக கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர், கடம்பவனேஸ்வரர் ஆகிய கோவிலில் அமைச்சர் செந்தில்பாலாஜி உடல் நலம் பூரணம் குணம் பெற வேண்டி 108 பெண்கள் குத்துவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில் அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதையடுத்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அமைச்சர் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதயத்தில் அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் ஐசியுவில் அவர் உள்ளார்.
வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவேரி மருத்துவமனையின் 7வது தளத்தில் இருந்து 4-வது தளத்தில் உள்ள தனி அறையில் மாற்றப்பட்டுள்ளார்.