இந்தியா

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீட்டு இணையதளம் முடக்கம்: அவதிக்குள்ளான பெண்கள்!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணம் வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், இணையதளம் முடங்கியுள்ளதால் விண்ணப்பதாரர்கள் தவித்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு கடந்த 15-ந் தேதியன்று அவர்களின் வங்கிக்கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது.

சில மகளிரின் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்படாததால் தொகை வராமல் போன நிலை ஏற்பட்டது. இதனை சரி செய்து அவர்களின் வங்கி கணக்குகளுக்கும் விரைவில் உரிமைத்தொகை வரவு வைக்க அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இணையதளம் முடக்கம்

மகளிர் தொகை திட்டத்தில் விண்ணப்பம் அளித்தும் தொகை வரவு வைக்கப்படாதவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய அரசால் https://kmut.tn.gov.in என்ற இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம். இதற்காக கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. இந்த இணையதளம் ஓரிரு நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் முடங்கியுள்ளதால் பலரும் சிரமமடைந்து வருகின்றனர். இந்நிலையில் இணையதளம் பராமரிப்பில் இருப்பதாகவும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button