தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பஸ் யாத்திரை முடிந்து கைதாவார்! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உறுதி
இந்தியாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை முடிந்ததும் ஊழல் காரணமாக கைது செய்யப்படுவார் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் 168 நாட்களில் பாதயாத்திரையை மேற்கொள்ளும் அண்ணாமலை சென்னையில் நிறைவு செய்கிறார். இந்த பாத யாத்திரையை கடந்த ஜூலை 28 ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது இருந்து அண்ணாமலை பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
இதேவேளை, சுதந்திர தினமான நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் கொடியேற்றி வைத்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை என்ற பெயரில் பஸ் யாத்திரை செய்து கொண்டிருக்கிறார். நடை பயணம் சென்றால் அவர் ராகுல் காந்தி போல மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது. ஊர் குருவி உயர பறந்தாலும் பருந்து ஆகாது.
மேலும், பாத யாத்திரையை முடிக்கும் போது அண்ணாமலை பதவியில் இருக்க மாட்டார். முக்கியமாக, கர்நாடகா மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த போது செய்த ஊழலுக்காக அவர் கைது செய்யப்படுவார். தற்போது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நிலவி வருகிறது. அதனால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிச்சயம் கைது செய்யப்படுவார்” எனக் கூறியுள்ளார்.