இந்தியா

வட மாநில இளைஞர் இந்தியில் பேசியதால் கன்னத்தில் அறைந்த தமிழக டிக்கெட் பரிசோதகர்

இந்தியாவில் தமிழகத்தில் உள்ள பெரம்பூர் ரயில் நிலையத்தில் வட மாநில இளைஞர் ஒருவரை கன்னத்தில் அறைந்த டிக்கெட் பரிசோதகரின் வீடியோ வைரலாகி வருகிறது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் முதலாம் ரயில் மேடை முடியும் இடத்தில் வட மாநில இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பெண் டிக்கெட் பரிசோதகர் அக்சயா, அந்த இளைஞரிடம் டிக்கெட் காட்டுமாறு கூறினார். ஆனால், அந்த வட மாநில இளைஞர் தன்னிடம் டிக்கெட் இல்லை என்று கூறினார். இதற்கு டிக்கெட் பரிசோதகர் அவரை அபராதம் செலுத்தும்படி கூறினார். அதற்கு அந்த இளைஞர், நான் ரயில்வே எல்லையில் நிற்பதாகவும், அபராதம் செலுத்த முடியாது எனவும் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, வட மாநில இளைஞரை தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அக்சயா விசாரித்தார். அப்போது, அந்த இளைஞர் இந்தியில் பேசினார். அது, மேலும் டிக்கெட் பரிசோதகரை கோபத்தை ஏற்படுத்தியது. பின்னர் டிக்கெட் பரிசோதகர் அக்சயா, இது எங்க ஊரு, தமிழில் பேசு எனக் கூறி அபராதம் கட்ட வேண்டும் என மிரட்டினார். ஒரு கட்டத்திற்கு மேல் கோபமான அக்சயா, வட மாநில இளைஞரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனை, அங்குள்ள பயணி ஒருவர் வீடியாவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாக நிலையில், பெண் டிக்கெட் பரிசோதகர் அக்சயா மற்றும் அவரது அதிகாரி ஹரிஜான் ஆகியோரை தெற்கு ரயில்வே துணை மேலாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Back to top button